குருவே துணை !
மௌன அனுபவங்கள் !
வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !
நான் 22 வருடங்களுக்கு முன்பு எனது 29 ம் வயதில் திருநெல்வேலியில் திரு.பத்மநாபன் ஐயா அவர்களிடம் தவ தீட்சை பெற்றுக் கொண்டேன். தியானத்தில் ருசி கண்ட பூனையாக, எனது வங்கிப் பணியை ஆழியார் அருகிலேயே மாற்றிக் கொண்டு, ஆசிரமம் அருகிலேயே வீடு கட்டி வந்து விட்டேன். 2013, நவம்பர் 03 முதல் 15 வரை, ஆழியார் ஆசிரமத்தில் 12 நாட்கள் மௌனம் இருந்தேன், எனது துணைவியாருடன் ! அற்புதமான பேரமைதி சூழல்! பயிற்சிகள் இல்லை! பார்வையாளர்கள் இல்லை! பணியாளர்களுக்கும் அமைதி உத்தரவு!
மௌன காலத்தில் நான் யார் முகத்தையும், அமைதித்திருநிலையத்தில் என் துணைவியாருடன் ஒரே அறையில் நான் தங்கியிருந்தாலும், அவர்கள் முகத்தைக் கூட இந்த 12 நாட்களும் பார்த்ததில்லை! எதாவது முக்கிய செய்தி என்றால் குறிப்பு சீட்டில் எழுதிப் பரிமாறிக் கொள்வோம்! வெறும் வாய் பேசாமல் மட்டும் இருப்பது 'வாக்கு மௌனம்'! திரைப்படத்தில் ஊமையாக நடிப்பது போல்!.
ஆனால் இது ‘மகா மௌனம்’ ! ‘மகா மௌனம்’ என்பது வெறும் ஐந்து புலன்களை மட்டும் அடக்குவது அல்ல ! ஆறாவது புலனான அந்த எண்ணங்களையும் நிறுத்துவது தான் ! உலகை ஆண்ட சித்தார்த்தன், தன்னை , தன் ஆறு புலன்களை ஆண்ட பொழுது தானே புத்தனாக உலகம் முழுவதும் ஒளி வீசத் தொடங்கினான்?
நமக்கு பெரிய தொந்தரவு நம் எண்ணங்கள் தான் ! ‘எக்கார்ட் டோல்’ எனும் ஞானி சொல்வது போல், எண்ணங்கள் சினிமா ப்ரொஜெக்டர் போன்று இயங்கி, கடந்த கால நிகழ்வுகளை எதிர்மறை காட்சிகளாக, வருத்தம், கோபம், சோகப் படக் காட்சிகளாக ஒட்டிகொண்டிருக்கும் அல்லது எதிகாலத்தில் அப்படி ஆகுமோ, இப்படியாகுமோ என்று பயம், கவலை தரும் மர்மப் படத்தை ஓட்டும்.
இந்த உலகம் எவ்வளவு பெரியது? விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங்ஸ் சொல்கிறார். ஒன்பது மைல் விட்டமுடைய ஒரு கோளத்தில் முழுவதும் மண் நிரப்பினால் அதில் எத்தனை மண் துகள்கள் இருக்கின்றனவோ, அத்தனை நட்சத்திரங்கள் இந்த பிரபஞ்சத்தில் உள்ளனவாம்! சுத்த வெளி எல்லையற்றது எனில், அதில் இது போல் எத்தனை பிரபஞ்சங்கள் உள்ளனவோ? எத்தனை கோடி வருடங்களாக அது உள்ளது? நம் வாழ்வு எவ்வளவு சின்னது? ஒரு தூசி போல் , ஒரு நீர் குமிழி தோன்றி மறையும் காலமே நம் வாழ்க்கை ! இதனை எவ்வளவு அமைதியாக, பேரின்பமாக கழிக்க, களிக்க வேண்டும் ? ஏன் இத்தனை எதிர்மறை உணர்ச்சிகள் ? துரியாதீதம் நிற்க நிற்க நம் இன்றைய நிலை புரிய ஆரம்பித்தது !
நான் ஒன்றும் செய்யாமல் எழும் எண்ணங்களை விலகி நின்று கவனிக்க ஆரம்பித்தேன். நீர் குமிழி போல் ஒவ்வொரு எண்ணமாக வந்து வந்து செல்லும்! எண்ணம் வேறு , நான் வேறு என்பது புரிய ஆரம்பித்தது. நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். வெறும் கற்பாறையாக அமர்ந்து விட்டால் போதும். குருவே அறிவாக இயங்கி எதிர்மறை எண்ணங்களை ஒவ்வொன்றாக செதுக்கி எடுத்து விடுவார் . நம் மனம், ஆன்மா ஒரு அழகிய கற்சிலையாக வெளிப்படும் !
“ நாய் எலும்பை சுவைக்கும் பொழுது, அது வாயில் குத்தி அதனால் வரும் ரத்தத்தை அந்த எலும்பிலிருந்து வருவதாக நினைத்து சுவைக்குமாம் ! அது போல் எண்ணங்களால் நம் ஜீவ காந்தம் தான் செலவு ஆவது தெரியாமல் எதிர் மறை எண்ணங்கள் ஒரு பழக்கமாக சுவையாகி விடுகிறது ! உண்மையில் உனக்கு எதிரி என்று ஒன்று உண்டெனில் அது உன் உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமேயாம்!” என்று சுவாமிஜி சொன்னதன் முழு அர்த்தமும் இப்பொழுது தான் புரிந்தது !
தென்னை மரம் சாக்கடை நீரில் நின்றாலும், அதன் இளநீரில் சுத்தமான நீர் இருப்பது போல், உலகில் ஆயிரம் பிரச்சனைகள், குழப்பங்கள், தீய விஷயங்கள் இருந்தாலும் நம் மனம் நல்ல எண்ணங்களுடன் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது புரிந்தது!.
“குரு குரு என்கிறாயே, நீ எந்த அளவு குருவின் போதனைகளை சாதனை செய்கிறாய் ? குணநலப்பேற்றில் முழுமை பெற்றுவிட்டாயா?” என்ற கேள்வி பின் மண்டையில் தட்ட ஆரம்பித்தது !
ஒரு நாள் ரூமிலிருந்து வெளியே கிளம்பும்போது, வீட்டிலிருந்து கொண்டு வந்த ஒரு ஆரஞ்சு பழம், மேஜையில் வெளியே இருந்தது, பத்திரமாக எடுத்து பைக்குள் வைத்து விட்டுச் சென்றேன். அது என்ன தங்கமா? அதுவும் இது ஆசிரமம் என்ற அறிவு கூட இல்லாமல்!. பழக்க தோசம்! நேராக அறிவுத்திருக்கோயில் சென்றால், என்றும் இல்லாத வகையில், அங்கு வாசலில் பணியாளர் மௌனமாக அருகில் வந்து, ஒரு பையை திறந்து நீட்டினார். அதில் அரஞ்சு சுளைகள்! ஒன்று எடுத்துக்கொண்டு, மௌனம் என்பதால் நன்றி சொல்ல முடியாமல், மெல்ல தலை வணங்கி, வாயில் போட்டுக் கொண்டு சென்றேன். அதில் மகரிஷியின் அன்பும், கருணையும் தெரிந்தது. மாலை நான் பத்திரப்படுத்தி வைத்த ஆரஞ்சு கெட்டுப்போய் இருந்தது. "தான்", "தனது" எனும் சொத்தாக நாம் என்ன வைத்திருக்கிறோம் என்று புரிந்தது.
தவத்தின் ஆரம்பத்தில் “அன்னைக்கு வணக்கம்!, தந்தைக்கு வணக்கம்!, ஆசானுக்கு வணக்கம்!” என்று சொல்லுகிறோமே, அங்கு நம் ஆன்மாவைத்தானே நாம் வணங்குகிறோம். நம் ஆன்மா நம் அன்னை தந்தை ஆன்மாக்களின் ஒரு பின்னம் தானே? பாலுக்கு உறை ஊற்றியது போல் நம் ஆசானின் ஆன்மாவும் ஒரு துளி சேர்ந்து விட்டது. நம் சஞ்சித குணங்களையும், ஆகாமிய கர்மங்களையும் திருத்த உள்ளே குச்சியோடு காத்துக் கொண்டிருக்கும் நம் குரு, நம் அறிவாக இயங்கி, நம்மை சரி படுத்தும் நாட்களே “மௌன காலம்” என்பது புரிந்தது!
இதற்கே நான்கு நாட்கள் ஆகியது !
பின்னர் அறிவு விழித்துக் கொள்ள ஆரம்பித்தது! புதிய எண்ணங்கள் வர ஆரம்பித்தன ! அந்த பழைய பதிவுகள் அல்ல!. புதிய நுண்ணிய உண்மைகள் அருவியென கொட்ட ஆரம்பித்தன. சுவாமிஜி "எவர் ஒருவர் மனதை நுண்ணிய அலை வரிசையில் ஒழுங்கு படுத்திக் கொள்ளுகிறார்களோ அவர் மூலம் இயற்கையின் ரகசியங்கள் வெளிப்படும்" என்று சொன்னது போல், சுவாமிஜியின் தத்துவங்களுக்கு புதிய விளக்கங்கள் கிடைத்தன!
இந்த நிலையில், அருவியென கொட்டும் அறிவு ஒளியில், நம் மனம், நம் ஆன்மா ஒரு பொற்சிலையாக ஒளிர ஆரம்பிக்கும் ! ஆழியாரில் நீண்ட நாள் மௌனத்தில் இருப்பவர்கள், அறிவு எழுச்சி பெற்று, எதாவது எழுதிக் கொண்டே இருப்பதை நாம் காணலாம்! மௌன கடலில் மூழ்கி எடுத்த முத்துக்கள் அவை ! குறித்து வைத்துக்கொண்டேன்!
இன்னொரு எச்சரிக்கை அனுபவமும் சொல்ல வேண்டும் . மௌன நாட்களில் இரவு படுக்கும் முன் 5 நிமிடம் சாந்தி இறங்குங்கள் என்று பேராசிரியர்கள் தினசரி இரவு தவம் முடித்த பின் சொன்னார்கள். இது எதோ மௌன சம்பிரதாயம் என்று நான் உதாசீன படுத்திவிட்டேன். ஆனால் ஒரு நாள் இரவு ஒரு பொருந்தா உணர்வு ஏற்ப்பட்டு முழித்து விட்டேன்! பட படப்பாக உணர்ந்தேன். உடலுக்கும் உயிருக்கும் ஒரு போராட்டம் இருப்பது புரிந்தது! நான் செய்த அதீத தொடர் தவ சோதனைகளால், சுத்த வெளியில், மீண்டும் மீண்டும் காலை முதல் விரிந்து விரிந்து பழகிய ஆன்மா, தூக்கத்தில் மனம் கட்டளையிடாமலேயே , அனிச்சையாக தானாக விரிய முயலும் உணர்வு தெளிவாகத் தெரிந்தது. மழை நீரின் இயல்பு, கடலுக்கு மீண்டும் செல்வது போல், நாம் அந்த இறை வெளியிலிருந்து தானே வந்தோம்! என்ன தான் காப்பு கயிறு கட்டியிருந்தாலும், இந்த ஆபத்து விஞ்ஞான ரீதியாக உள்ளது புரிந்தது. உடனே நடு இரவில் உட்கார்ந்து சாந்தி இறக்கினேன். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தானே! மகிரிஷி சொல்லும் எல்லா வரிகளையும், கட்டளைகளையும் நாம் வேத வாக்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது இதிலிருந்து ஒரு பாடமாக அமைந்தது.
அறிவு எழுச்சி நிலையில் மேலும் நான்கு நாட்கள் சென்ற பின், மெதுவாக அந்த மூடிய புலன்கள் திறந்து கொள்ள ஆரம்பித்தன! உலகம் அழகாக ஒளிர்ந்தது ! நம் ஆன்மா ஒளிரும் வைரச்சிலையாக மாறி உலகை ரசிக்க ஆரம்பித்து! ஏற்கெனெவே இயற்கை எழில் கொஞ்சும், பறவைகள் ஆட்சி புரியும் மலை அடிவாரம்! இதில் மேலும் பச்சை பசேல் புல் வெளிகள், நந்தவனத்தில் வித விதமான ரோஜாச் செடிகள், அறிவு திருக்கோயில் முன் ஓடிவரும் அருவி, இரவில் ஒளிவிடும் விளக்குகள் என்று அருட்பெரும்ஜோதி நகரத்தையே ஒரு சொர்க்க லோகமாக மாற்றி வைத்திருக்கிறார்கள். இதற்கு நம் சங்கத் தலைவர் அவர்களுக்கும், அறங்காவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்! அழகும் அறிவும் ஒரு சேர ஆட்சி புரியும், மகானின் சன்னதி இது!
மனம் இயற்கையோடு ஒன்ற ஆரம்பித்தது ! மணிக் கம்பத்தின் கீழுள்ள அந்த ஆரஞ்சு நிற பூச்செடியில், தேனீக்களும், பல வண்ண வண்ணத்து பூச்சிகளும், தேன் சிட்டுக்களும், மாறி மாறி வந்து தங்களின் அலகுகளின் நீளத்துக்கு ஏற்ப தேனை உறிஞ்சிச் செல்வது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது ! இரவு ஒரு மணி நேர துரியாதீத தவம் முடித்து, உணவுக்கூடம் செல்லும் வழியில், அறிவரங்கம் பின் புறம், அந்த மலையிலிருந்து ஓடிவரும் நீரின் சல சலவென்ற ஓசை, அருகிலுள்ள மரத்தின் பூவின் சுகந்தம், எதிரே வானத்தில் ஒளிரும் முழு நிலவு, அருகே வனத்திலிருந்து வீசும் குளிர் காற்று என்று நான்கு புலன்களும் மயங்கி நின்றன!
மதியம் உணவு உண்டு முடித்து , தட்டு கழுவும் போது , அந்த குழாய் நீர் தட்டில் விழுந்து , 360 டிகிரியும் சிதறி ஓடுவது, தீபாவளி அன்று பொருத்தும் தரை சக்கரத்திலிருந்து வெளிப்படும் ஒளிக்கற்றைகளாக ஜொலித்தது! ஆனால் ரொம்ப நேரம் ரசிக்க முடியவில்லை! பக்கத்தில் பார்ப்பவர்கள், என்ன இந்த ஆளுக்கு மன நிலை சரியில்லையோ என்று நினைத்து விடுவார்களோ என்ற பயம் வந்தது !
மணி மண்டபத்தில் வெளியே வேலியோரமாக நடந்துவரும் பொழுது , ஒரு கருப்பு வெள்ளைக் குருவி, வேகமாக பறந்து வந்து என்னருகில் உட்கார்ந்தது! வழக்கமாக நாம் அருகில் வந்தால் பறந்து செல்லும்! “உனக்கு என்ன வேண்டும்?” என்று நின்று அன்போடு (மனதால்) கேட்டேன். பார்த்துக்கொண்டே நின்றது. "ஓ! வீட்டில் சிட்டுக்குருவிக்கு அரிசி வைப்பது போல் உனக்கும் சாப்பாடு வேண்டுமா?" என்று மனதால் கேட்டேன்! உடனே ஆம் என்பது போல் வாயை பரிதாபமாக திறந்து காட்டியது! சிறிது நேரம் இந்த நிலையிலேயே நின்றோம்! பின்னர் என் மனம் வேறு எங்கோ சென்றவுடன் அது வேறு திசை நோக்கி பறந்தது. There is no illusion or exaggeration in this experience. 100% I felt the resonance between us. தியானம் தெரிந்தவர்களுக்கு இது புரியும்! மற்றவர்களுக்கு, வயிற்றில் இருக்கும் ஏழு மாதக் குழந்தையிடம் அதன் தாய் "கண்ணே ! அந்த நீல வானின் அழகைப் பார்! அதில் அந்த மாலை நேரத்து சிகப்புச் சூரியன்! அந்த அருவி முன் தெரியும் வானவில்!" என்று சொல்லிக்கொண்டே போனால் "யம்மா வாயப் பொத்து! எனக்கு ஒண்ணுமே புரியலே !" என்று சொல்வது போல் சொல்ல தோன்றும் !
இந்த பூமியில் ஆண்டவன் படைப்பை ரசிக்கும் பொழுது, இன்னொரு உண்மையும் ஞாபகத்தில் எழுந்தது. ஒரு புல் பூண்டு கூட இந்த உலகில் இல்லாத அளவுக்கு, இந்த பூமியை 200 தடவை அழிக்கக் கூடிய அளவுக்கு நாம் அணு குண்டுகள் தயார் செய்து வைத்துள்ளோம்!
அந்த டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில், எதோ விண் கல் பூமியில் மோதி அவை அழிந்தனவாம்! ஆனால் ஆறு அறிவு படைத்த நாம், நம்மை நாமே அழிக்க ரெடியாகி விட்டோம்! ஓரறிவு தாவரம் கூட நேராக பஞ்சபூதங்களிலிருந்து தங்கள் உணவை உறிஞ்சிக் கொள்கின்றன. நமக்கு அந்த சக்தி கூட கிடையாது. அந்த தாவரங்கள் அல்லது மற்ற உயிர்களை உண்டு தான் நாம் வாழ முடிகிறது. ஆனால் ஆறு அறிவு என்று பெருமையாக சொல்லிகொள்ளும் நாம், நம்மையும், பூமியில் மற்ற உயிர்களையும் அழிக்க, அணு குண்டுகள் ரெடி பண்ணி விட்டோம்!. மெய்ஞ்ஞானம் தெரியாத விஞ்ஞானத்தின் விளைவு இது! தனது இறுதிக்காலத்தில் வருத்தப்பட்டாராம் ஐன்ஸ்டீன் ! என்ன புண்ணியம்? இதைக் கேட்டு தனது ஒவ்வொரு செல்களும் நடுங்கின என்கிறார் சுவாமிஜி ! அதற்குத்தான் உலக சமாதான திட்டங்கள் வகுத்தார் !
மௌன நாட்களில், மாலை நேரங்களில், சுவாமிஜி DVD ஒளிபரப்பினார்கள். அதில் சுவாமிஜி, தான் ஐநா சபை அமர்ஷில்ட் அரங்கத்தில் ஆற்றிய உரை பற்றியும் , உலக பரிசு வர விஞ்ஞானிகள் ஆற்றிய முயற்சி பற்றியும் உரைத்தார்கள். “சுத்த வெளியில் என்ன இருக்கிறது? What is the black matter?” என்று இன்றும் விஞ்ஞானிகள் மண்டையைப் பிய்த்துக் கொண்டு இருக்கிறார்கள். வெறும் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள நம் சுவாமிஜி அதனைக் கூறி விட்டார்கள்.
விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங்ஸ், 'பிரபஞ்ச அடிப்படை உண்மைகள் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. யாராவது அதனை எளிமையாக கண்டுபிடித்துச் சொல்வார்கள். பின்னர் அதனை நாங்கள் எல்லா விஞ்ஞான தேற்றங்களிலும் பொருத்தி, திருத்தி உலகுக்குச் சொல்லுவோம்' என்று சொல்கிறார். சுவாமிஜி சொன்ன பிரம்மஞான கருத்துக்களை இயற்பியல் சமன்பாடுகளாக மாற்றி, விஞ்ஞான உலகிற்கு எடுத்துச் சென்றால், அன்று உலகம் ஆழியாரைத் திரும்பிப் பார்க்கும்! சித்தர் போகர், சுவாமிஜி தவத்தில் காட்சி தந்து உறுதி அளித்த அந்த உலகப்பரிசும் வரும்!
ஆழியார் ஒரு நாள் உலக முக்கியத்துவம் பெரும் என்று சுவாமிஜி கூறியிருக்கிறார்கள். ஞானிகள் சொல்வது பொய்ப்பதில்லை! அன்று உலக சமாதனம் இங்கிருந்தே பரவும்! நாமெல்லாம் உலக சமாதான தூதர்களாக மாறுவோம்!
மௌனத்தில் ஆழ்ந்து ஆழ்ந்து, இன்னும் குருவின் தத்துவங்களில் தெளிவு பெற்று, நம்மை நாமே புடம் போட்டுக்கொண்டு, உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு நாம் வாழ்ந்து காட்டினால், குரு காட்டும் பாதையில் மற்றவர்களுக்கும் வழி காட்டினால், அந்த உலக சமாதனம் தொட்டுவிடும் தூரந்தான் என்று கூறி, இப்படி ஒரு மகா மௌனச் சூழல் ஏற்படுத்தித் தந்த உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் பத்ம ஸ்ரீ SKM மயிலானந்தம் ஐயா அவர்களுக்கும், ஏனைய அறங்காவலர்களுக்கும், நிர்வாகத்தினருக்கும், பணியாளர்களுக்கும், எல்லாம் சூக்குமமாக இருந்து நடத்தும் மகா ரிஷி வேதாத்திரி மகரிஷிக்கும் உளங்கனிந்த நன்றிகள் கூறி விடைபெறுகிறேன் !
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!
குருவே துணை !
- அ/நி ரவிஒளிமதி ஆவுடையப்பன் .